Powered By Blogger

சனி, 25 ஆகஸ்ட், 2012

சமூக சேவை

தேனி மாவட்டத்தில் இருக்கிறது 'மனிதநேயம் ஆதரவற்றோர் காப்பகம்’. வீரபாண்டி, கோடாங்கிப்பட்டியிலும் கிளை இல்லங்கள் உண்டு. இங்கு ஒரு முறை சென்று திரும்பினால், கரையாத மனமும் கரைந்துவிடும். அவ்வளவு கண்ணீர்க் கதைகள் அங்கே புதைந்து கிடக் கின்றன! இந்தக் காப்பகத்தை நடத்தும் பால்பாண்டியிடம் பேசினேன். ''எங்ககிட்ட 123 குழந்தைகள் இருக்கு. இதுல சுமார் 100 குழந்தைகள் குடிநோய்ப் பெற்றோரால் பாதிக்கப்பட்டு ஆதரவு இழந்து இங்கு வந்தவங்கதான். குடிச்சிட்டு வந்து அம்மாவைக் கொலை செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போன குடிநோயாளியின் குழந்தை, குடிச்சிட்டு வந்து புருஷன் தலையில கல்லைப் போட்டுக் கொலை செஞ்ச குடிநோயாளி பொம்பளையின் குழந்தைன்னு இங்க இருக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் பின்னாடி ஒவ்வொரு கதை இருக்குது. இது அத்தனைக்கும் காரணம் பாழாய்ப்போன இந்த மதுதான்.இப்படி, குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 20 குழந்தைகளோட கதைகளை விவரமாக அவங்க சொல்லுற மாதிரியே எழுதி, குழந்தைகளின் கையெழுத்துக்கள் போட்டு, டாஸ்மாக் கடைகளை மூடணும்னு தமிழக முதல்வருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் மனு கொடுத்து இருக்கோம். அனுப்பி ஒரு வருஷம் ஆச்சு. இதுவரை எந்தப் பதிலும் இல்லை. குழந்தைகளோட கண்ணீருக்குக் கூட இந்த அரசு செவிசாய்க்காதா?'' என்று கேட்கிறார் பால்பாண்டி.

பால்பாண்டியும் இந்தக் குழந்தைகளும் செய்துவரும் சமூக சேவை முக்கியமானது. தேனி மாவட்டத்தில் இருக்கும் சேரிப் பகுதிகளுக்கு வாரந்தோறும் சென்று மது எதிர்ப்புப் பிரசாரம் செய்கின்றனர். தேனியில் இருக்கும் அழகர்சாமி காலனி, ஜவஹர் நகர், வள்ளி நகர், அல்லி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இவர்களின் பிரசாரம் காரணமாகக் குடியை நிறுத்தியவர்கள் பலர். நல்ல உள்ளங்கள் வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக