Powered By Blogger

வியாழன், 4 ஏப்ரல், 2013

மாசடைந்த காற்றில் எந்தன் ஜீவன்?



சென்ற ஆண்டு மார்ச் மாதம் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வினய் பிறந்தபோது அவனின் எடை ஒரு கிலோவிற்கும் குறைவாக இருந்தது. நீளம் 40 செ.மீ. இத்தனைக்கும் வின குறைப்  பிரசவத்தில் பிறந்த குழந்தை இல்லை. சாதாரணமாக இந்தியக் குழந்தை பிறக்கும்போது 2.5 கிலோ முதல் 3 கிலோ எடையுடனும் 50 செ.மீ., முதல் 80 செ.மீ., நீளத்துடனும் இருக்க வேண்டும். பொதுவாக குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் இப்படி எடை குறைவாக இருக்கும். ஆனால், வினயைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. மற்றபடி அவன் ரொம்பவே  சாதாரணமாக இருந்தான். குறிப்பிட்ட இடைவெளியில் அவனை இங்கு கொண்டு வந்தார்கள். இப்போது நன்றாகவே வளருகிறான்" என்கிறார், இங்கு பணிபுரியும் மகப்பேறு மருத்துவர் ஒருவர்.

வாழ்க்கை முறை மாறுபாடு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தொடர் மன அழுத்தம் தொடர்பான உடல்நல, மனநலப் பிரச்சினைகள் எனப் பல காரணங்களால் குறைந்த எடையுள்ள குழந்தைகள்  பிறப்பது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அப்போலோ மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர். சுமன்னா மனோகர், இதற்கு மிக முக்கியக்  காரணம், காற்று மாசு" என்று கூறி அதிர வைத்தார். தொடர்ந்து அவரே, கருவுற்ற பெண் தொடர்ந்து மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது அதில் உள்ள நச்சுக்களையே கருவும் சுவாசிக்கிறது. குப்பைகளை எரிப்பது, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை போன்றவற்றால் காற்று மாசு தவிர்க்க முடியாததாகி விட்டது" என்கிறார்.

சென்னை மாநகராட்சியின் பிறப்பு பதிவேட்டைப் பார்த்தால், கடந்த சில ஆண்டுகளாக குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பது அதிகரித்து இருப்பது தெரிகிறது. 2008ம் ஆண்டில் பிறந்த ஒரு லட்சத்து 13 ஆயிரத்து  642 குழந்தைகளில் 11.7 சதவிகிதம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்து இருக்கிறார்கள். 2012ல் குழந்தை பிறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 191 ஆக குறைந்துள்ளது. ஆனால், எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15.6 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. இதில் 3 சதவிகிதக் குழந்தைகள் ஒரு கிலோவிற்கும் குறைவான எடையில் பிறந்துள்ளார்கள்.

சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா உட்பட 9 நாடுகளில் 39 லட்சம் குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் நியூகாஸ்டல் (‡Newcastle university) பல்கலைக்கழகம் இதை நடத்தியது. வாகனம் மற்றும் நிலக்கரியிலிருந்து வெளிப்படும் மாசுபட்ட காற்றை கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து சுவாசிக்கும்போது, எடை குறைந்த குழந்தைகள் பிறப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், இதுபோல குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பின்னாளில் பல உடல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் வெளி விஷயங்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது காற்று மாசு. சுத்தமான, போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் போவது. குறிப்பாக, சிகரெட் புகை மோசமான பாதிப்பை கருவிலேயே ஏற்படுத்தும்" என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரி மகப்பேறு துறைத் தலைவர், டாக்டர். மீனலோசனி. யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட சுற்றுச்சூழல் குறித்த ஆய்வறிக்கையில், காற்று மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட காற்று மாசின் அளவைவிட 5 மடங்கு அதிகமாக இந்தியாவில் காற்று மாசடைந்து இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘லேன்செட்’ (lancet) என்ற சர்வதேச மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்தியா உட்பட பல நாடுகளில் 4ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறப்பதாகக் கூறுகிறது. 2010ல் பிறந்த 35.19 லட்சம் குழந்தைகளில் 13 சதவிகிதம் குழந்தைகள் 37 வாரங்களுக்கு முன்பே குறைப்பிரசவத்தில் பிறந்துள்ளன. இதில் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், 3 லட்சம் குழந்தைகள் இறந்திருப்பதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை காற்று மாசு மோசமாக இருந்தாலும் சுகாதார வசதிகள் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் முழுவீச்சில் செயல்படுவதால் எடை குறைந்த குழந்தைகளைக் காப்பாற்றுவது சாத்தியமாகி உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் 700 கிராமிற்கு குறைவான எடையில் குழந்தைகள் பிறந்தால், காப்பாற்றுவது சிரமம். ஆனால், இன்று அனுபவமிக்க திறமையான டாக்டர்கள், நவீன தொழில்நுட்பம் என்று இந்தப் பிரச்சினையை எளிதாக கையாள முடிகிறது. பெருநகரங்களில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அனுபவம் மிக்க டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளனர். இன்குபேட்டர் உட்பட போதிய மருத்துவக் கருவிகளும் இருக்கின்றன. கடந்த ஆண்டு இங்கு பிறந்த 500 கிராம் எடையுள்ள குழந்தை, தற்போது முதலாண்டு பிறந்தநாளைக் கொண்டாடி ஆரோக்கியமாக வளருகிறான்" என்கிறார், சூர்யா மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைப் பிரிவு இயக்குநர் டாக்டர். தீபா ஹரிஹரன்.

வெறுமனே இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவது மட்டும் விஷயம் இல்லை. அவர்களின் முக்கிய உடல் உறுப்புகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றன. இதனால், ஆறு வயது வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டியுள்ளது. காற்று மாசைக் குறைப்பது உடனடி சாத்தியம் இல்லைதான் என்றாலும், குறைந்தபட்சம்  இந்த நச்சு வாயுக்களை சுவாசிப்பதிலிருந்து  கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது தற்போதைய அவசர, அவசியத் தேவை" என்கிறார்கள் டாக்டர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக