Powered By Blogger

சனி, 20 ஏப்ரல், 2013

கிடைக்குமா நீதி?

நீதி

இந்த இரண்டெழுத்துச் சொல்லுக்குள் இருக்கிறது ஓர் நீண்ட வரலாறு.  தமிழ்ச் சமூகத்தில் நீதி கேட்பதும் நீதி வழங்குவதுமான பண்பு, நேற்று இன்று ஏற்பட்டதல்ல. தமிழின் ஆதி காவியமான சிலப்பதிகாரமே நீதி கேட்ட ஒரு பெண்ணின் கதைதான். அதில் கண்ணகி, ‘வாயில் கடை மணி நடு நா நடுங்க, ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்’ என மனுநீதிச் சோழனின் கதையை சுட்டிக் காட்டுகிறாள். அது சிலப்பதிகாரம் எழுதப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே வாய் பேச வழியற்ற விலங்குக்கும் நீதி வழங்கும் முறை தமிழர்களிடம் இருந்திருக்கிறது என்பதற்கு சாட்சி. தமிழர்களின் இந்த நீதிமுறையைப் போற்றும் விதமாகத்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுநீதிச் சோழன் சிலை நிற்கிறது.

ஆனால், இன்று நம் கையில் இருப்பது சில நூற்றாண்டுகளுக்குமுன் வெள்ளைக்காரன் விட்டுச் சென்ற நீதி இயந்திரம். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, அவர்களே நீதிபதிகளின் நாற்காலிகளை அலங்கரித்தார்கள். அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக வழக்குகள் ஆங்கிலத்திலே நடத்தப்பட்டன. வாதங்களும் ஆங்கிலத்திலேயே எடுத்துரைக்கப்பட்டன. ஆனால், அதிலும்கூட, ரோமானிய நீதிமுறையை அடிப்படையாகக் கொண்ட நீதிமுறை என்பதால், லத்தீன் சொற்களுக்கும் மேற்கோள்களுக்கும் இடமளிக்கப்பட்டன.

ஆங்கிலேயர் அறுபதாண்டுகளுக்கு முன்னதாகவே விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற நீதி இயந்திரம் நம்மிடையே இன்றும் இருக்கிறது. அதில் இன்னும் ஆங்கிலமே ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது.

நீதித்துறை மீது நம் மக்களுக்கு மரியாதை இருக்கிறதோ இல்லையோ, அச்சம் நிச்சயமாக இருக்கிறது. தட்டிக் கேட்க முடியாத அளவிற்கு அதிகாரங்களைத் தம்மிடம் கொண்டவர்கள், தங்களுக்குப் புரியாத மொழியில் பேசினால், அந்த அச்சம் அதிகமாகத்தானே இருக்கும்?

நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அது வழங்கப்பட்டது என்பதும் தெரிய வேண்டும் என்ற நீதியின் அடிப்படை இலக்கணத்தை ஏற்றுக் கொண்டவர்கள், உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அதனால்தான் நெடுங்காலமாக கோரி வருகிறார்கள்.

உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியானால் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது, எத்தகைய வாதங்கள் வைக்கப்படுகின்றன, மனுவில் தங்கள் நிலை சரியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆங்கிலம் அறியாத தமிழ் மட்டுமே அறிந்த அடித்தட்டு மனிதர்களும் அறிந்து கொள்ள இயலும். அது நீதி வழங்கப்படுவதை மேலும் செம்மையாக்கும், சிறப்பாக்கும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளில் தமிழ் அறியாத அயல் மாநிலத்தவரும் இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பது யதார்த்தம். அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதற்காக, ஆங்கிலம் அறியாத சாதாரண மனிதர்களது உரிமையைப் பறித்துக் கொள்வது நியாயமா என நீதிமான்கள் எண்ணிப் பார்க்கட்டும். தமிழறியாத நீதிபதிகளுக்கு நீதிமன்றத்தில், நாடாளுமன்றத்தில் உள்ளதைப்போல, உடனுக்குடன் மொழிபெயர்ப்பு வசதிகளைச் செய்து தரலாம். அத்துடன், வாதங்களை ஆங்கிலத்தில் எழுத்து வடிவில் அளிக்குமாறும் வழக்கறிஞர்களுக்கு ஆணையிடலாம்.

இதுகுறித்த சட்டமன்றத் தீர்மானத்தை ஜனவரி மாதம், மத்திய அரசு நிராகரித்து விட்டது. மக்கள் நலன் கருதி, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வாய் பேச வழியற்ற விலங்கிற்கும் நீதி அளித்த தமிழனுக்கு அவன் தாய்மொழியில் நீதி கிடைக்காதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக