Powered By Blogger

புதன், 3 ஏப்ரல், 2013

எழுச்சி!

எழுச்சி!
மாலன்

முதலில் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுப்புகள் முளைத்து காலக் காற்றில் உதிர்ந்தன. பின் ஒரு லட்சம் உயிர்கள் கொல்லப்பட்டன. அதிர்ச்சியில் உறைந்தது உலகம். அழுகுரல்களும் ஆவேசப் பொறிகளும் பீரிட்டெழுந்தன. அடுத்த சில நாள்களில் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பின. முடிந்தது எல்லாம் என நினைத்தார்கள். ஆனால், விதைத்து முளைக்கும் என்பது விதி. இயற்கை காலங்காலமாய் கண்ணெதிரே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் விதி.

முள்ளிவாய்க்காலில் புதைத்தது முளைத்தது மறுபடியும். எங்கே? எங்கு மாணவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, சமூகப் பிரச்சினைகளில் அக்கறை இல்லை, இளைஞர்கள் எல்லாம் சுயநலவாதிகளாகி விட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டதோ அந்தத் தமிழ்நாட்டில். அதன் தலைநகரில்.

சென்னையில் மார்ச் 8ம் தேதி இரவு திலீபன், பிரிட்டோ, அந்தோணி ஜாஜி, பார்வைதாசன், பால் கென்னத், மணி, சண்முக பிரியன், லியோ ஸ்டாலின் ஆகிய 8 பேர் கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கம் என்ற தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதம் தொடங்கினர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவர்கள் அனைவருக்கும் வயது இருபதிற்குக்கீழ். இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை.

ஆரம்பத்தில் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் இருந்த இவர்களது போராட்டத்தை ஊடகங்கள் ஒளிபரப்பிய பின் அரசியல்வாதிகள் அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மாணவர்களிடம் உரையாற்றலாம் என வந்த திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனைப் பேசவிடாமல் கோஷம் போட்டுத் திருப்பி அனுப்புகிறார்கள். காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவால் உண்ணாவிரதப் பந்தலை நெருங்கவே முடியவில்லை. சரமாரியாக கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர் மீது வீசுகிறார்கள். திருமாவளவன் பேச்சு அடுத்த சில நிமிடங்களில் முகநூலில் கிண்டலடிக்கப்படுகிறது.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. தட்டிக் கேட்க வேண்டியவர்கள் தட்டிக் கழித்தார்கள். மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த யாருடைய சமாதானமோ, ஆதரவோ எங்களுக்குத் தேவையில்லை" என்கிறார், உண்ணாவிரதம் இருந்த மாணவர் பிரிட்டோ.

இதுநாள்வரை அரசியல் அமைப்புகளின் பேச்சைக் கேட்டு ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என நம்பி இருந்தோம். ஆனால், அந்த நம்பிக்கை பாழானதே தவிர வேறு எந்தவொரு பயனும் இல்லை. ஈழப் பிரச்சினையை அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனரே தவிர ஈழ மக்களுக்கென்று அவர்கள் எதுவும் செய்யவில்லை.  அதனால், தான் முற்றிலும் எந்தவொரு அரசியல் இயக்கத்தையும் நம்பாமல் போராட்ட களத்தில் மாணவர்களாகிய நாங்களே இறங்கியுள்ளோம். இது முழுவதும் மாணவ சக்தியால் நடத்தப் படும் போராட்டம்" என்கிறார், புதுவை மாணவர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் சுவாமிநாதன்.

அரசியல் கட்சிகள் எடுத்ததற்கு நேர் எதிரான நிலையை அந்த 8 லயோலா மாணவர்களும் எடுத்திருந்தார்கள். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வற்புறுத்த 7ம் தேதி நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகள் கோரின. அந்தக் கோரிக்கையை முன் வைத்து, தில்லியில் அதே 7ம் தேதி திமுக டெசோ கூட்டத்தை நடத்தியது. அதற்காக மார்ச் 12ம் தேதி கடையடைப்புக்கும் திமுக அழைப்பு விடுத்தது. ஆனால், 8ம் தேதி இரவு உண்ணாவிரதம் துவக்கிய லயோலா  மாணவர்கள்,  தமிழக அரசியல் கட்சிகளுக்கு நேர் எதிராக, ‘அமெரிக்கத் தீர்மானம் அயோக்கியத் தீர்மானம், அதை ஆதரிக்கக் கூடாது’ எனத் தங்கள்  கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக, அவர்களது அரசியல் கோஷங்களுக்குப் பலியானவர்களாக மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை அவர்களின் இந்த நிலைப்பாடு உணர்த்தியது.

மாணவர்களின் போராட்டம் கவனம் பெறுவதைக் கவனித்த அரசு, அவர்களைக் கைது செய்தால் போராட்டம் ஓய்ந்துவிடும் என நினைத்திருக்க வேண்டும். இரவோடு இரவாக அவர்களைக் கைது செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு முன்னெச்சரிக்கையாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்தையும் சீல் வைத்தது.

ஆனால், இது நெருப்பை, ஓலைக் கூடைக்குள் ஒளித்து வைத்த ‘புத்திசாலித்தனமாக’ ஆனது. எட்டு பேரின் போராட்டம் ஓய்ந்தது. ஆனால், எட்டுத் திக்கும் போராட்டம் வெடித்தது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, எனத் தமிழகத்தின் பெரிய நகரங்களில் மட்டுமன்றி,  நாகை, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், வேதாரண்யம், புதுக்கோட்டை, கரூர், நெல்லை, சிதம்பரம், விருத்தாச்சலம்  போன்ற சிறிய நகரங்களிலும் மாணவர்கள் போராட வீதியில் இறங்கினர். தமிழகத்தில் மட்டுமன்றி, புதுச்சேரிக்கும் போராட்டம் பரவியது. சட்டக் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள், ஏன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட என அனைத்துத் தரப்பும் களமிறங்கினர். சாதாரணமாக இது போன்ற போராட்டங்களில் பங்கேற்க முன்வராத சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள், ஞாயிறன்று கல்லூரி வளாகத்திற்குள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.

என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த அரசு, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து விடுதிகளை மூடியது. வெள்ளிக்கிழமை (மார்ச் 15) இரவு 9 மணிக்குள் விடுதியிலிருந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் திகைத்தார்கள். திடீரென இரவில் வெளியே போ என்றால் என்ன செய்வார்கள்? ஆனால்,  மாணவர்கள் தனித் தனியாகப் பிரிந்து அவரவர் ஊர்களுக்குச் சென்றால், போராட்டம் பிசுபிசுத்துவிடும் என அது எண்ணியது.

ஆனால், தணல்போல் சிவந்த இரும்பில் தண்ணீரைக் கொட்டியது போலானது. உதிரி உதிரியாகப் போராடிக் கொண்டிருந்த மாணவர்கள், ஒரு கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டார்கள். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள், நள்ளிரவில் மெரினா கடற்கரைக்குச் சென்று, காந்தி சிலை அருகே  உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தனர். எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பப் போவதில்லை. மாணவர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம். போராட்டம் நடக்கும் இடத்திலேயே தங்குவோம்" என கோவை மாணவிகள் தெரிவித்துள்ளனர். அவர்களது சக மாணவர்கள், மாணவிகளுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்துதர முயற்சி எடுத்து வருகின்றனர். இன்னொரு புறம் மாவட்ட அளவில் உள்ள அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களிடத்தில் பேசி, அவர்களது உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்து வருகின்றனர். மற்றொரு புறம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களது பெயர்,  ஊர் முகவரி ஆகியவற்றை மத்திய உளவுத்துறை திரட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. நாளை அரசு வேலையில் சேர இது இடையூறாக இருக்கும் எனச் சொல்லி, மாணவர்களைப் போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்ய இந்த முயற்சி.

ஆட்சியிலிருப்பவர்கள் இப்படியெல்லாம் குறுக்குவழிகளைப் பின்பற்றினால் விஷயம் விபரீதமாகிவிடும். மாணவர்களின் இந்தப் போராட்டத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இரண்டு. 1. மாணவர்கள் எந்த அரசியல் கட்சியையும் அணுகி ஆதரவு கேட்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர்களை நோக்கி வருகிற அரசியல் கட்சிகளிடமிருந்து கூட அவர்கள் விலகி நிற்கிறார்கள். 2. அவர்கள் இந்த நிமிடம் வரை (மார்ச் 18 மாலை வரை) வன்முறையில் இறங்கவில்லை. தீக்குளிப்பது போன்ற உணர்ச்சி மேலீட்டால் மேற்கொள்ளும் அசட்டுத்தனங்களில் இறங்க வில்லை. அவர்களது வயதுக்கு மீறிய பொறுமையோடும் முதிர்ச்சியோடும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

ஆனால், இந்த முதிர்ச்சி அவர்களது கோரிக்கைகளில் இல்லை. பல கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறக் கூடியவை அல்ல.  உதாரணமாக, பொது வாக்கெடுப்பு போன்றவை, சர்வதேச அளவில் நீண்ட கால லாபி, பரப்புரை, ஒருங்கிணைப்பு ஆகியவை மூலமே சாதிக்க முடிந்தவை. வேறு சில அரசமைப்புச் சட்டத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை.

எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெற நான்கு அம்சங்கள் முக்கியமானவை.

1. இலக்கு குறித்த தெளிவு.
2. உத்திகள்
3. செயல் திட்டம்
4. ஒருங்கிணைப்பு

தன்னெழுச்சியாக கிளர்ந்துள்ள இந்த மாணவர் போராட்டத்தில் இவை இல்லை. இதன் காரணமாக சிறிது காலத்திற்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப் போகலாம் அல்லது தங்களுக்கு ஆதாயம் இல்லை என்பதால், அரசியல் கட்சிகள் இதை அலட்சியப்படுத்தி மறைமுகமாக பலவீனப்படுத்தலாம். அரசுகள், மிரட்டல்கள் ஒடுக்கல்கள் மூலமாக இதை முடக்கலாம். ஆனால், இந்த எழுச்சி வீண் போகாது. ஏனெனில் -

விதைத்தது முளைக்கும். அது இயற்கையின் விதி.

அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?

ரவிக்குமார்  (பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
இதுவொரு தன்னெழுச்சிப் போராட்டம். இந்தப் போராட்டம் நீடிக்கலாம் அல்லது ஓரிரு நாளில் முடிந்துவிடலாம். ஆனால், இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தக் கோப அலை மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக காங்கிரசுக்கு எதிராகத் திரும்பும். பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட படம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழப்பிரச்சினையில் அரசியல் கட்சிகள் எதுவும் சரியாக செயல்படவில்லை. அரசியல் கட்சிகள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இது அரசியல் கட்சிகளின் தோல்வி. இளைய சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெற முடியாமல் போனதற்கான காரணம் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் சிந்திக்கவேண்டும்."


ஜி.ராமகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், சிபிஎம்)
இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.இப்படிப்பட்ட சூழலில் மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுயேச்சையான, நம்பகத் தகுந்த விசாரணை நடத்தப் படவேண்டும்  அதற்கு  ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் ஒன்று திரண்டிருப்பது வரவேற்கத்தக்கது."


இள.புகழேந்தி (மாணவரணி செயலாளர், திமுக)
நியாயமான கோரிக்கை களுக்காக தமிழக மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்று திரண்டுள்ளனர். அதை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். உண்மையான உணர்வுகளோடு போராட்டக் களத்தில் உள்ள இந்த மாணவர்கள், வரலளாற்றில் முக்கிய இடத்தை வகிப்பார்கள்."


சமரசம் (அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.)
இந்தக் கொந்தளிப்புக்கு சேனல் 4 தான் காரணமே ஒழிய, அரசியல் கட்சிகள் அல்ல. போராடும் மாணவர்களிடம் தேசியமும் இல்லை, திராவிடமும் இல்லை. அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு போராடுகிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டம், ஈழத்துக்கான மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது."


சி.மகேந்திரன் (மாநில துணைச்செயலாளர், சிபிஐ)
தற்போது நடைபெறும் போராட்டம் இளைய தலைமுறையின் அரசியல் எழுச்சியைக் காட்டுகிற, சக்தி வாய்ந்த போராட்டம். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதைப்போல அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மாணவர்கள் அம்பலப்படுத்துகின்றனர். இந்திய அரசின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தி, அத்தீர்மானத்தில் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று நிர்ப்பந்தம் தருகின்றனர். முக்கியமாக, இப்போராட்டத்தின் மூலமாக, ஈழ விடுதலைக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகளவில் அழுத்தம் கிடைத்துள்ளது."


மல்லை சத்யா (துணைப்பொதுச்செயலாளர், மதிமுக)
ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டிய அளவுக்கு 1965ல் தமிழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் படுதீவிரமாக இருந்தது. அந்த அளவுக்கு சக்திமிக்க போராட்டம் தற்போது எழுந்துள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்கள் திரண்டுள்ளனர். ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள் மீதும் அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று  சொல்ல முடியாது. ஒருகாலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த திமுக, இன்றைக்கு நிலை மாறிவிட்டதால், அந்தக் கட்சியைத்தான் மாணவர்கள் எதிர்க்கின்றனர்."


பி.எஸ். ஞானதேசிகன், (மாநிலத் தலைவர், காங்கிரஸ் கட்சி)
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு இந்தியா உதவி செய்கிறது. 13வது சட்டத்திருத்தம் வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், அது இந்தியாவின் கையில் இல்லை. இன்னொரு நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வால்தான் முடியும். ஆனால், அந்தளவு இந்தியாவிற்கு ஐ.நா.வில் பலம் கிடையாது. போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும்."


இல.கணேசன், (மாநிலத் தலைவர், பாஜக)
தமிழகத்தில் மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவது பாராட்டுக்குரியது. ஆனால், அது ஓர் அடையாளமாக இருந்தால் போதுமானது. மாணவர்களின் இந்த உணர்வை எதிரொலிக்க மறுக்கிற அரசியல் கட்சி எது இருக்கிறது? மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுதான் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்."
பேட்டிகள்: ஆ. பழனியப்பன்


ண்ணாவிரதமிருந்த லயோலா மாணவர்களில் ஒருவரான திலீபன் 1,330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூபாய் 10,000 பெற்றவர். முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல்,  குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல், குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளை நினைவு கூரும் ஆற்றல் கொண்டவர். கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால், கிழமையைச் சொல்லும் திறமை கொண்டவர். பதினாறு கவனக நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.  
தகவல்: வசந்தகுமார், கிராபிக் டிசைனர் /முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக