Powered By Blogger

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

தங்க இறக்குமதியைக் குறைப்பது சரியா?


தங்க இறக்குமதியைக் குறைப்பது சரியா?


ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கே.சி. சக்ரபர்த்தி, மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்திடவேண்டும்; தங்க இறக்குமதி அதிகரித்துக்கொண்டே போவது, நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என சில தினங்களுக்கு முன் கூறியுள்ளார். அவர் அப்படி கூறியதற்கு என்ன காரணம்?

அரசின் நடப்புக் கணக்கு (Current Acount Deficit) 38.7 பில்லியன் டாலரை எட்டி இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொன்னால், சுமார் இரண்டு லட்சத்து பனிரெண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது  கோடி ரூபாய். இப்படி ஒரு நிலைமை ஏற்படக் காரணம் என்ன? இந்தியாவின் ஏற்றுமதி மிகவும் குறைந்து, இறக்குமதி அதிகரித்துவிட்டதுதான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்குக்  காரணம்.

இந்த நிதி ஆண்டில் இந்தியாவில் இதுவரை 800 டன்னுக்கும் அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  ஒரு பக்கம் தங்கத்தின் விலை கடுமையாக உயருகிறது. இன்னொரு பக்கம் தங்கம் இறக்குமதி அதிகரித்துக்கொண்டே போகிறது. பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்ந்தால், அதை வாங்குவதைக் குறைத்துவிடுவோம். அது தங்கத்துக்குப் பொருந்தவில்லை. காரணம், நம் நாட்டில் தங்கத்தை வெறும் உலோகமாகப் பார்ப்பதில்லை. அது நம் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்துவிட்ட சென்டிமெண்ட் உலோகம்.

சமீப காலமாக ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. இந்த நிதி ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை விட கூடுதலாக 2.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்துள்ளோம்.

இது நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜி.டி.பி.) 4.6 சதவிகிதம் ஆகும். குறிப்பாகச்  சொல்லப்போனால், நாம் இறக்குமதி செய்துள்ள மொத்த மதிப்பில், தங்கத்தின் மதிப்பு மட்டும் 1.11 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதி  ஆண்டின் முதல் 6 மாதங்களில் நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி 7.4 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேநேரம் இறக்குமதி  4.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் தங்க இறக்குமதிக்கு முக்கியப் பங்குண்டு.

ஏற்றுமதி குறைந்ததற்குக்  காரணம், நம் பொருட்களை வழக்கமாக இறக்குமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதுதான். அந்த நாடுகளின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது! ஆனால், இறக்குமதியைக் குறைப்பது நம் கையில்தானே உள்ளது?

நல்லவேளையாக, அன்னிய நேரடி முதலீடுகளும் அன்னிய நிறுவன முதலீடுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், இந்தியாவில் கடும் நிதி நெருக்கடி ஏற்படாமல் தப்பித்துக் கொண்டோம்.

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் வகையில் தங்கக் கட்டிகளுக்கான இறக்குமதி வரியை 2 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தினார். இதனால், நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் தங்கம் இறக்குமதி 30 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்நிலையில் ருசி கண்ட பூனைபோல், தற்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தங்க இறக்குமதி வரியை மேலும் உயர்த்தப் போகிறார் என்று தெரிகிறது.

தங்கக் கடத்தலுக்கு வழிவகுக்கும்

அதேநேரம் நாம் ஒரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. தங்கம் மீது அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தப்படுவது அதிகரிக்கும். இன்னும் சொல்லப்போனால், கடந்த நான்கு மாதங்களில் தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளது என்பதே  இதற்குச் சான்று.

இதைச் சுட்டிக் காட்டினால், வரியை உயர்த்தாவிட்டாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்கிறார் நிதி அமைச்சர்.

ஆக, இறக்குமதி தங்கத்தின் விலை விரைவில் அதிகரிக்கும் என்பது தெளிவு.

ரிசர்வ் வங்கியும் களம் இறங்குகிறது!

தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு, மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் அணுகுமுறை இதுவென்றால், ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு இது விஷயத்தில் விரைந்து செயல்படத் தொடங்கிவிட்டது. இதற்காக கே.யூ.பி.ராவ் (ஆலோசகர் - பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறை, ரிசர்வ் வங்கி) தலைமையில் ஒரு செயற்குழுவை ஏற்கெனவே அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் என்னவெனில், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை உருவாக்கவேண்டும் என்பதே. உதாரணமாக, தங்கம் சார்ந்த வங்கி டெபாசிட்கள், தங்கப் பத்திரங்கள், வருவாய் வரி விலக்கு, வீட்டிலும் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் உறங்கிக் கொண்டிருக்கும் தங்கத்தை பொருளாதாரத்துக்குப் பயன்படக்கூடிய வங்கி முதலீடுகளாக, புதிய அம்சங்களுடன் கூடிய புதுமையான பத்திரங்களாக வடிவமைக்கவேண்டும் என்பதே குழுவின் பரிந்துரைகளின் சாரம்.

கடந்த கால அனுபவம்!

கடந்த காலங்களில் வங்கிகள் அறிமுகம் செய்த தங்கம் தழுவிய டெபாசிட்கள் போனி ஆகவில்லை என்பதுதான் உண்மை. பொதுமக்களிடமிருந்து கணிசமான அளவில் தங்கத்தை இந்த முதலீட்டுத் திட்டங்கள் திரட்டிட இயலவில்லை.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி 1999ம் ஆண்டில் தங்க டெபாசிட்டை அறிமுகம் செய்தது. கடை விரித்தேன், கொள்வாரில்லை‘ என்கிற நிலை இருந்ததால், அத்திட்டம் திரும்பப் பெறப்பட்டது. மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009ல் அதே வங்கி சில மாற்றங்களுடன் தங்க டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தது. அப்போதும், திருப்பதி தேவஸ்தானம் போன்ற பெரிய, பெரிய கோயில்கள், அறக்கட்டளைகள் மற்றும் பெரும் செல்வந்தர்களிடமிருந்து ஓரளவு தங்கம் திரட்ட முடிந்ததே தவிர, அந்தத் திட்டமும் வெற்றி பெறவில்லை. வெறும் 36 டன் தங்கம் மட்டுமே 1996 வரை இத்திட்டத்தின் மூலம் திரட்ட முடிந்தது. அப்போது இருந்த தங்க ஸ்டாக்கில் இது 0.4 சதவிகிதம் மட்டுமே என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பொதுவாக இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்திட வேண்டுமெனில், குறைந்த பட்சம் 200 கிராம் (25 பவுன்) முதலீடு செய்யவேண்டும் என்பது விதிமுறை. அதேபோல், முதிர்ச்சி காலம் 3 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகம். இந்த மாதிரியான விதிமுறைகள் தளர்த்தப்பட்டால்தான் அது மக்களைக் கவரும்.

டெபாசிட் செய்யப்படும் தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்படுகின்றன. தங்கத்தை டெபாசிட் செய்தால், அதே நகை தங்களுக்கு மீண்டும் கிடைக்கவேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.

 E.T.F. (Exchange Traded Fund) திட்டத்தில் சேர்ந்துள்ள தங்கத்தை தேவையானபோது வாங்கிக் கொள்ளலாம் என்கிற வசதியை ஏற்படுத்தினால், இந்தத் திட்டம் மேலும் நல்ல வரவேற்பைப் பெறும். ஏற்கெனவே, தங்க E.T.F. திட்டத்தில் 12,000 கோடி ரூபாய் புரளுகிறது. இது தற்போதைய சந்தை விலையின்படி 40 டன் தங்கத்துக்குச் சமம்.

கைகொடுக்கும் நகைக்கடன்!

அவசரத் தேவைக்கு நகையை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக உள்ளது. ஏழை, பணக்காரர், நகரவாசி, கிராமவாசி என்ற எந்த பேதமும் இல்லாமல் எதிர்பாராத தேவைக்கு நகைக்கடன் வாங்கும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கிறது. வங்கிகளிலும், வங்கி சாராத ஃபைனான்ஸ் கம்பெனிகளிலும் 1.21 லட்சம்  கோடி  ரூபாய் அளவுக்கு தங்கக்கடன் கொடுத்திருக்கிறார்கள். 2012ம் ஆண்டு நிலவரப்படி, இதற்கு 621 டன் தங்கம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இந்த அளவு பரவியுள்ள நகைக்கடன் வசதியை தொடரத்தான் வேண்டும். இப்படி அமைப்பு ரீதியாக இயங்கும் தங்கக் கடன் வசதி இல்லையெனில், தன் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒரு 5 பவுன் தங்கம் வாங்கவேண்டுமானால், ஏழை, எளிய குடும்பம் தங்கள் வாழ்க்கையையே அடமானம் வைக்கவேண்டும்.

கட்டுப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் சராசரி இந்தியன் தனது சேமிப்புக்கு பாதுகாப்பாகக் கருதுவது தங்கத்தை மட்டுமே என்பதால், தங்கத்திற்கான தேவை அதிகரிக்குமே தவிர குறையாது.

ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் 80,000 முதல் 90,000 திருமணங்கள் நிகழ்கின்றன. அதன் அடிப்படையில் அடுத்த சில ஆண்டுகளில் திருமணங்களுக்காக மட்டும் எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆக, நடுத்தர மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது தங்கத்தின் மீதுள்ள மோகத்தால் அல்ல; அது தரும் பாதுகாப்பு உணர்வால்தான்!

தேவை புதுமையான திட்டங்கள்!

இதையெல்லாம் கருத்தில்கொண்டு, தங்கம் முற்றிலுமாக நகைகளிலும் லாக்கர்களிலும் முடங்காமலும் தேவையானபோது, தங்கமாகவே திரும்பக் கிடைக்கும் வசதியுடனும் புதுமையான  வழிமுறைகளுடனும் தங்க டெபாசிட்கள் வடிவமைக்கப்படவேண்டும். அப்படிச் செய்தால், அவை வெற்றி பெறக்கூடும்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தங்க டெபாசிட்கள் வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதுபோன்ற திட்டத்துக்கு நடுத்தர மக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வையும் உருவாக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான் நீண்டகால அடிப்படையிலாவது தங்க இறக்குமதியை படிப்படியாகக் கட்டுப்படுத்தி, பொருளாதாரம் மேம்படுவதற்கு உதவிடமுடியும். மாறாக, அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை உடனடியாக குறைக்கவேண்டும் என்ற நோக்கில், தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த முயல்வது நடைமுறை சாத்தியமா என்பது கேள்விக்குறியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக