Powered By Blogger

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

மருத்துவத் துறையில் உலகளவில் புதிதாக சில கண்டுபிடிப்புகள்




இன்சுலின், இனி ‘அவுட்’சுலின்!

சர்க்கரை நோய்க்குத் தரப்படும் இன்சுலின், செல் மூலக்கூறில் சென்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் முடிவு, சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையைத் தந்திருப்பதுடன் தினமும் இன்சுலின் தேவைப்படும் லட்சக்கணக்கானவர்களுக்கு அதன் தேவையையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவுகளை பிரதான ஆராய்ச்சியாளர் மைக் லாரன்ஸ், சர்வதேச மருத்துவ இதழான, ‘நேச்சர்’ (nature) ல் வெளியிட்டு உள்ளார். ‘இன்சுலினை செலுத்தியவுடன் மூலக்கூறுகள் எப்படி உடல் செல்களைத் தூண்டி, இன்சுலின் ஹார்மோனை சுரக்க வைக்கிறது என்பது இவ்வளவு நாட்களாக புதிராக இருந்தது. 20 ஆண்டுகளாக ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த முடிவுகள், சர்க்கரை நோய்க்கு தற்போது இருப்பதைவிட அதிக சக்தி வாய்ந்த புதிய மருந்துகள் கண்டுபிடிக்க உதவும்’ என்கிறார் மைக் லாரன்ஸ்.

பக்கவாதத்துக்கு பை... பை!

பக்கவாதம் வந்தவர்களை மீண்டும் எழுந்து நடக்க, புதிய மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளார், அமெரிக்க ஆராய்ச்சியாளரான பேராசிரியர் பிராங்க் லோங்கோ. உடல் இயக்கம் முற்றிலும் நின்றுபோன சுண்டெலிகளுக்கு இந்த மருந்தைக் கொடுத்ததில் அவை  நடக்கத் தொடங்கியதோடு, நீச்சல் பயிற்சியைப்போல சில உடல் அசைவுகளையும் செய்து, விஞ்ஞானிகளை வியப்படையச்  செய்துள்ளன. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்தப் பேராசிரியர்,  சுண்டெலிகளை வைத்து பரிசோதித்த மருந்தின் பெயர் LM11A-31. அடிபட்ட 4 மணி நேரத்தில் ஒருமுறையும் அதன்பின் தினமும் 2 வேளை வீதம் 42 நாட்கள் தொடர்ந்து இந்த மருந்தைக் கொடுத்து சோதித்தபோதுதான் பக்கவாதம் பாதித்த சுண்டெலிகள்  நடக்க ஆரம்பித்தன. இது  மனிதர்களுக்கும் கொடுத்துப் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும்.

புற்றுநோய் பாதிப்பை ஆர்.என்.ஏ. மூலம் அறியலாம்!

ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக, ரத்தப் பரிசோதனை மூலம் கண்களைப் பாதிக்கும் புற்றுநோயைக் கண்டறிய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இதனால், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. கண்களில் கட்டி இருக்கும் இடத்தில் உள்ள ரத்தத்தைப் பரிசோதித்து, அதில் உள்ள மைக்ரோ ஆர்என்ஏ (micro-RNA)அளவை வைத்து புற்று நோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.  ‘‘கீமோதெரபி கதிரியக்க சிகிச்சையை மேற்கொள்ளும் நோயாளிக்கு, புற்றுநோய் பாதிப்பு எந்த அளவு இருக்கிறது என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப சிகிச்சையை தொடரவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவும்’’ என்று இந்த ஆராய்ச்சியின் திட்ட இயக்குநர் டாக்டர். எஸ். கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக