Powered By Blogger

சனி, 9 பிப்ரவரி, 2013

ஒளிவு மறைவு ஏன்? ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், யோசிக்க நிறைய இருக்கிறது.


அரசால் அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபலப் பாடகி திருமதி. எஸ். ஜானகி ஏற்க மறுத்து விட்டார். இப்படி ஓர் அரசு கௌரவத்தை ஒருவர் ஏற்க மறுப்பது இது முதல் முறையல்ல என்பதால் இது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால், பத்ம விருதுகள் குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன.

ஒருவர் எந்த அடிப்படையில் பத்ம விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது இதுவரை விடுபடாத புதிர். விளங்கிக் கொள்ள முடியாத மர்மம்.

தகுதியுள்ள பலருக்கு ஆண்டுக்கணக்கில்- சில சமயம் அவர்கள் ஆயுள் முழுதும் கூட- பத்ம விருதுகள் அளிக்கப்படுவதில்லை. ஆனால், வேறு சிலருக்கு என்ன காரணத்தினாலோ அந்த கௌரவம் எளிதாகக் கிட்டிவிடுகிறது.

2009ம் ஆண்டே ஐஸ்வர்யா ராக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவிக்கு வழங்கப்படுகிறது. ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் ஜஸ்பால் பட்டிக்கு அவர் மறைவிற்குப் பின் பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. திறமையான நடிகர் என அனைவராலும் ஏற்கப்பட்ட நாகேஷுக்கு அவர் வாழ்ந்தபோதோ, மறைந்த பின்னரோ பத்ம விருதுகள் அளிக்கப்பட்டதில்லை.

பாட வந்த இரண்டாண்டுகளுக்குள்ளாகவே உதித் நாராயணுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால், 55 ஆண்டுகளாக, 800 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள திரு.எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இதுவரை (அவருக்கு வயது 84) பத்ம விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை.

‘பத்ம விருதுகளுக்காக நான், கடந்த ஆண்டு அவர்கள் (விஸ்வநாதன் -ராமமூர்த்தி) பெயரைப் பரிந்துரைத்தேன். ஆனால், மாநில அரசு மீது விரோத மனப்பான்மை கொண்டுள்ள மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை’ என்று தமிழக முதல்வர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

திரைக் கலைஞர்கள் மட்டுமல்ல, தகுதி வாய்ந்த பலர் கண்டு கொள்ளப்படாமலே இருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால், அது அரசாங்கத்திற்கு இழுக்கு என்பதை அரசு உணர வேண்டும்.

ஒவ்வொரு செப்டம்பர் மாதமும், மாநில அரசுகள், கலாசார அமைப்புகள், விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்புகள், முன்பு பத்ம விருதுகள் பெற்றவர்கள் ஆகியோரிடமிருந்து விருதுக்குத் தகுதியானவர்களின் பெயர்கள்  பெறப்படுகின்றன. பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலர், மத்திய அமைச்சரவைச் செயலர், உள்துறைச் செயலர், குடியரசுத் தலைவரின் செயலர் ஆகியோரையும், அதிகாரிகளாக இல்லாத சிலரையும் கொண்ட ஒரு குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

மாநில அரசுகளின் பரிந்துரைகள் பல நேரங்களில் ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக பீகார் மாநில அரசு 2009ல் 11 பெயர்களைப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஒருவரைக் கூட விருதுக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்த ஆண்டு 39 பெயர்களை கேரள அரசு பரிந்துரைத்திருந்தது. ஒரே ஒருவரது பெயர் மாத்திரம் ஏற்கப்பட்டது. சில சமயம் யாரும் பரிந்துரைக்காத பெயர்கள் விருதுப்பட்டியலில் இடம் பெறுகின்றன. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டபோது அவரது பெயரை எந்த சங்கமும் பரிந்துரைத்திருக்கவில்லை.

தேர்வு முறை திறந்த வெளிப்படையான விதத்தில் நடைபெறாதவரை இந்த விருதுகள் கௌரவமல்ல, அவமானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக