Powered By Blogger

புதன், 26 ஜூன், 2013

உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக கடந்த 5-ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளவில்லை. அரசின் பிரதிநிதியாக உள்ளாட்சித்துறை அமைச்சரை அனுப்பி வைத்தார்.

‘ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சர்கள், மத்திய அரசுக்கும் சமமான பொறுப்பு கொண்டவர்கள். மத்திய அரசுடன் சம பங்கைக் கொண்டுள்ள மாநில முதல்வர்கள் இந்தக் கருத்தரங்க விவாதங்களில் தங்கள் தரப்பு பங்களிப்பையும் வழங்க நிச்சயம் விரும்புவார்கள். ஆனால், அவர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் போல் மத்திய அரசு பயன்படுத்துகிறது’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மட்டுமல்ல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கலந்துகொள்ளாத காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. கூட்டத்தில்  கலந்துகொண்ட குஜராத் முதல்வர் மோடியும், ஜெயலலிதாவைப் போல, ‘இந்தக் கூட்டம் ஒரு சடங்கு’ என்று கூட்டத்திலேயே தெரிவித்திருக்கிறார்.

முதல்வரின் இந்த எதிர்ப்பில் நியாயம் உண்டா அல்லது இது வெறும் அரசியலா? தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர், திமுக

மத்திய அரசானது, மாநில அரசுகளைக் கலந்து பேசாமல் முக்கிய முடிவுகளை எடுப்பது சில நேரங்களில் நடப்பதுண்டு. மாநில உரிமைகள் பறிக்கப்படும் சூழல் வருகிறபோது விழிப்புணர்வுடன் இருந்து போராட வேண்டிய கடமை மாநிலக் கட்சிகளுக்கு உண்டு. ஆனால், தமிழக முதல்வர் எதிர்ப்பு மனப்பான்மையோடு மட்டும் நடந்துகொள்கிறார். முதலமைச்சர் போன்ற பெரிய பொறுப்புகளில் உள்ளவருக்கு இது நல்லதல்ல. உரிய இடத்திற்குச் சென்று தட்டிக்கேட்க வேண்டும். நம்முடைய நிலையில் இருந்து தவறிவிடாமல், இணக்கத்தோடும் பக்குவத்தோடு அணுக வேண்டும்."

ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

 பல முக்கிய விஷயங்களில் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் உரிய முறையில் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுக்கிறது. அதற்கு மாநில அரசுகள் தலையாட்டினால் போதும் என்று நினைக்கிறது. கூட்டாட்சி முறையை கேலி செய்கிற போக்கு இது. மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளை அது தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு என்பது, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால், பயங்கரவாதத் தடுப்பு மையம் போன்ற அமைப்பைக் கொண்டு வருவது தேவையற்றது. மாநில அரசுகளின் கருத்துக்களையும் எதிர்ப்புக்களையும் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல், மத்திய அரசு தனது தன்னிச்சையான செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறது. கூட்டாட்சி முறைக்கு இது நல்லதல்ல.இச்சூழலில்,முதல்வர்கள் மாநாட்டில்  தமிழக முதல்வர் பங்கேற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்."

இல.கணேசன், தேசிய செயற்குழு உறுப்பினர், பாஜக

மத்திய அரசானது, அரசியல் ரீதியாக அல்லாமல் நிர்வாக ரீதியாக செயல்பட வேண்டும். அப்போதுதான், பொதுவான அரசாங்கமாக அது இருக்கும். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசோ, தன்னுடைய நோக்கங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று செயல்படுகிறது. அது மாநில அரசுகளை மதிப்பதில்லை. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களை மாற்றான்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. தன் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவும், சில மாநிலங்களை தன் வளையத்திற்குள் கொண்டு வருவதற்காகவும் கூடுதல் நிதி கொடுக்கிறது. பீகார் மாநிலத்திற்கு நிதியை வாரி இறைத்ததற்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது."

கே.எஸ்.அழகிரி,  நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ்

 மாநில முதல்வர்களை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதெல்லாம் மேம்போக்கான குற்றச்சாட்டு. அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கிற ஓர் மாநாட்டில், ஒரு முதல்வர் மட்டுமே பக்கம் பக்கமாக வாசித்தால் மற்ற முதல்வர்கள் பேச வேண்டாமா? நாடாளுமன்றத்தில்கூட குறிப்பு இல்லாமல் எவ்வளவு நேரமானாலும் பேசலாம். ஆனால், எழுதிக்கொண்டு வந்தால் அதை சமர்ப்பித்துவிட வேண்டும். உலகம் முழுவதும் இதுதான் நடைமுறை. எனவே, தமிழக முதல்வரின் குற்றச்சாட்டில் நியாயம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் முதல் எதிரியாக கருதப்படுபவர் நரேந்திரமோடி. அவர் கூட மாநாட்டில் முழுமையாகப் பங்கேற்று தன் கருத்துக்களை முன்வைத்து, தனது மாநிலத்திற்குத் தேவையான நிதியை வாங்கிச் செல்கிறார். மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது என்றால், இது எப்படி சாத்தியமாகும்?"

சி.மகேந்திரன், மாநில துணைச் செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கூட்டாட்சி என்பதுதான் நம் அரசியல் சாசனத்தின் அடிப்படை. ஆனால், மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நிதி ஒதுக்கீட்டில் தொடங்கி, மக்களுக்கான திட்டங்கள் வரை தன்னிச்சையாகவே செயல்படுகிறது. மாநில அரசுகளை கலந்து பேசாமலே பல சட்டங்களைக் கொண்டு வருகிறது. உலகமயமாக்கல் வந்த பிறகு மாநில அரசின் எந்த உரிமைகளைப் பற்றியும் மத்திய அரசு கவலைப்படுவது இல்லை. மத்திய அரசின் கவனமெல்லாம், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் இருக்கிறது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக